சென்னை : "அதிமுக.,வில் அனைவரும் முதல்வர்கள்"என முதல்வர் பழனிசாமி பேசியதை விமர்சித்து வரும் திமுக.,விற்கு அமைச்சர் ஜெயக்குமாரும், ஈவேரா குறித்து ரஜினி பேசியதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூவும் பதிலளித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தை கலகலக்க வைத்துள்ளது.
துரைமுருகன் தலைவராக முடியுமா?: கடந்த வாரம் சேலத்தில் பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுக.,வில் அனைவரும் முதல்வர்கள் தான். சாதாரண தொண்டன் கூட ஒருநாள் முதல்வராக முடியும் என்றார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக துரைமுருகன், அப்படியானால் முதல்வர் பதவியை ஓபிஎஸ்.,க்கு விட்டு தர முதல்வரா தயாரா? என கேள்வி எழுப்பினார். துரைமுருகனின் இந்த பேச்சு குறித்து, நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், "உள்ளாட்சித் தேர்தல் என்பது ஒரு இடைவேளைதான். அதிமுக தான் எப்போதும் ஹீரோ. 2021 ம் ஆண்டு கிளைமாக்ஸில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதிமுகவில் உள்ள நாங்கள் யாரும் மிட்டா மிராசுதாரர் கிடையாது.
பெரிய பாரம்பரியத்தை பின்னணியாக கொண்டவர்கள் இல்லை. நாங்கள் கொடி வைத்த காரில் வலம் வர எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தான் காரணம். அதிமுகவில் கட்சிக்காக கடுமையாக உழைக்கும் அடிமட்ட தொண்டனும் உயர் பதவிக்கு வர முடியும். திமுகவில் அப்படி நடக்குமா? இல்லை, துரைமுருகன் தான் கட்சி தலைவராக ஆக முடியுமா? இல்லை, ஸ்டாலின் தான் முதல்வர் பதவி துரைமுருகனுக்கு என அறிவிப்பாரா? " என பதில் கேள்வி எழுப்பி உள்ளார்.
தவறாக வழிநடத்தப்படும் ரஜினி : ஈவேரா குறித்து ரஜினி பேசியது குறித்த கேள்விக்கு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, 95 வயதிலும் சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர் ஈவேரா. மாபெரும் தலைவரின் போராட்டத்தை, பெருமையை சீர்குலைத்து பேசுவது தவறானது. நடிகர் ரஜினிகாந்த், தனது இரண்டாவது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிந்தது என்றால், அதற்கு ஈவேரா.,வின் கொள்கை தான் காரணம். எப்பொழுதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள். முதல்வர் பதவியை விட்டுக்கொடுப்பது பற்றி பேசும் துரைமுருகனுக்கு, திமுக தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க ஸ்டாலின் தயாரா? என்றார்.
அமைச்சர்களின் இந்த சரமாரி கேள்வி மற்றும் பதில் தாக்குதலால் தமிழக அரசியல் கலகலப்பாகி உள்ளது.